சனி, 27 டிசம்பர், 2008

பண்டிகைகளே பதற்றமாய்....

குஜராத்துக்கு அடுத்ததாக இனசுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மிகுந்த அச்சத்திற்கிடையே நடைபெற்றது. கொண்டாட்டங்கள் என்பன மனிதனின் அன்றாட வாழ்வியல் சலிப்புகளிலிருந்து அவனை மீட்டு புத்துணர்வையும் , தான் வாழும் சமூகத்தில் தன்னுடன் சேர்ந்து பயணிக்கும் பிற சமூகத்திரளினருக்கு தன்னுடைய உற்சாக வெளிப்பாட்டை அனுபவிக்கவும் பகிர்ந்துகொள்வதர்க்கான ஒரு தளமாகும்.
ஆனால் ஒரிசா வாழ் கிறிஸ்தவர்களுக்கோ வேறுமாதிரியான அனுபவம். அரசின் கணக்குப்படி எண்ணாயிரம் கிறிஸ்தவர்கள் அகதி முகாமில் வாழ்கின்றனர். கிட்டத்தட்ட முன்னூறு கிறிஸ்தவ கிராமங்கள் இன சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பெரு விழாவிற்கான டிசம்பர் ௨௫ ஆம் தேதியும் நெருங்க நெருங்க ஒரு வகையான பதற்றம் ஒரிஸ்ஸாவின் கந்தமால் மாவட்ட கிறிஸ்தவர்களை தொற்றிட தொடங்கியது. சங் பரிவாரத்தினர் கிறிஸ்தமஸ் அன்று கலவரம் செய்வோம் என மிரட்ட மகிழ்ச்சிப்பெருக்கின் நாளான கிறிஸ்துமசை நினைத்தாலே அடி வயிறு கலங்க ,நெஞ்சுக்கூட்டினுள் பயப்பீதி பரவ இருந்த நிம்மதியும் தொலைந்து போனது கந்தமால் வாழ கிறிஸ்தவர்களுக்கு.
சுவாமி லட்சுமானந்தா என்ற பாசிச அடியாள் மாவோ போராளிகளின் கைகளினால் பரம பதம் அடைந்திட்டப்போது அதற்கான விலையை கொடுத்தனர் அதனுடன் எவ்விதத்திலும் தொடர்பில்லாத கிறிஸ்துவர்கள் .கொலை.கொள்ளை,பாலியல் வன்புணர்ச்சி, சூறையாடல் ,துரத்தப்படல் என ஊழித்தாண்டவம் ஆடியது பாசிசம். சர்வ வல்லமை படைத்த ,அணு ஆயுத திறனுட்ய ,பிராந்திய வல்லரசு என்ற பட்டப்பெயருடைய பாரத திரு நாட்டின் நடுவணரசு வேடிக்கைப்பார்க்க பல நாட்கள் பற்றி எரிந்தது கந்தமால்.
அந்த ஊழித்தாண்டவ நாட்கள் நெஞ்சிலாட கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடுவணரசின் ஆயுத படையினர் +பாசிஸ்டுகளின் கூட்டாக கண்காணிக்க ,உருட்டல் மிரட்டல் விழிகளின் தயவில் ஏசுபிரானை நினைவு கூர்ந்தனர் அவரின் பாவப்பட்ட மந்தைகள்.
இந்தியாவின் சாபக்கேடான சாதீய கட்டுமானத்தினாலும் ,இந்நாட்டை ஆண்ட ,ஆளும் கொள்ளை கூட்டத்தினாலும் அற்ப புழு போன்று அழுத்தி, அமுக்கி வைக்கப்பட்ட ;கல்வி,கேள்வி ,வாழும் உரிமை என மறுக்கப்பட்ட கடைநிலை மக்களை உடை,உணவு ,கல்வி கொடுத்து மனிதர்களாக தலை நிமிர்ந்து வாழ வைத்த ஏசுவிற்கும் ,அவரது பாவப்பட்ட ஒரிசா வாழ் மந்தைகளுக்கும் பாரத தேசம் செய்திட்ட நன்றிக்கடனை என்னவென்று சொல்லிட!!!!..............