புதன், 4 பிப்ரவரி, 2009

பயங்கரவாதமும் சங்பரிவாரும்

அண்மைக்காலமாக இந்தியாவில் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டு இருக்கின்றன. விலை மதிப்பில்லா மனித உயிர்கள் பலியாகின்றன. வேதனை! வேதனை!! வெட்கம்!! இந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் மதவெறித்தனம் கொம்பு சீவப்பட்டு இருக்கிறது.
பெரும்பாலும் இந்தக் குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் முசுலிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்பது போன்ற ஒரு தோற்றம் கொடுக்கப்பட்டும் வருகிறது!
ஊடகங்களில் 71 சதவிகிதம் உயர்ஜாதி பார்ப்பனர்களின் கைகளில் அடைக்கலம் தேடியுள்ளதால், முஸ்லிம் தீவிரவாதம் என்ற தலைப்பில் திட்டமிட்ட வகையில் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர்.
ஆனால், அண்மையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள் - கண்டுபிடிப்புகள் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பல் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அந்தப் பழியை முசுலிம்கள்மீது சுமத்தும் ஒரு தந்திரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நிரூபித்து வருகின்றன!
இதன்மூலம் பெரும்பான்மை மக்களான இந்துக்களை சிறுபான்மை மக்களான முசுலிம்கள்மீது வன்முறையை ஏவிவிடுவதுதான் இதன் திரைமறைவு நோக்கமாகும்.
பார்ப்பனர்கள் - ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தவர்கள் எப்போதும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடக் கூடியவர்கள் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.
1. உதாரணமாக தேசப்பிதா என்று மக்களால் மதிக்கப்பட்ட காந்தி யாரைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பார்ப்பனன் என்ன செய்தான்? தனது கையிலே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக்கொண்டான்; முசுலிம்களின் மார்க்கப்படியான சுன்னத்தும் செய்துகொண்டிருந்தான் என்றும் கூறுகிறார்கள்!
காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் ஒரு முசுலிம் என்று பழி சுமத்தி,பிரச்சாரம் செய்து, இந்துக்களை முசுலிம்கள்மீது மோத விடும் சூழ்ச்சிதானே இது?
காந்தியாரைக் கொன்றது முசுலிம் அல்ல - ஒரு இந்துப் பார்ப்பனன் என்று தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தனர். அந்த உண்மை வெளிவருவதற்கு முன்பாக சில ஊர்களில் இந்துக்களால் முசுலிம்கள் தாக்கவும் பட்டனர்.
2. தமிழ்நாட்டில் சத்தியமங்கலத்தையடுத்த சதுமுகை என்ற ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டு இருந்தது. இன்னொரு சாமி சிலை பீடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு இருந்தது.
ஊரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் புத்திசாலித்தனமான விசாரணையில் சிக்கியவர் கள் யார் என்றால், அவ்வூர் இந்து முன்னணியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 17) மற்றும் செல்வக் குமார் (வயது 23) ஆகியோர்.
தாங்கள்தான் அவ்வாறு செய்ததாக இந்து முன்னணியைச் சேர்ந்த இருவரும் ஒப்புக்கொண்டனர். திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது பழியைப் போடுவதுதான் அவர்களின் நோக்கம் என்ற குட்டும் உடைபட்டது. (தி இந்து, 18.2.2002).
3. அதேபோல, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். 2006 ஜனவரி 24 இல் இது நடந்தது.
இந்து - முசுலிம் மதக் கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்ற பின்னணியில் இந்து முன்னணியினர் இருந்தனர். தென்காசி நகர இந்து முன்னணியின் தலைவர் குமார்பாண்டியன் என்பவர், முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டார். இதில் மூன்று முசுலிம்கள் கைது செய்யப்பட்டனர். மதக்கலவரம் ஏற்பட்டு, முசுலிம்களின் கடைகளும், வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
இதன் பின்னணியில் தென்காசியில் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டுவெடித்தது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அத்தனைப் பேரும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள்.
குமார்பாண்டியன் கொலை செய்யப்பட்ட போது பெரிய அளவில் மதக்கலவரம் ஏற்படாததால், இந்தக் காரியத்தைச் செய்து அதன் மூலம் பெரிய அளவு கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கம் என்று கைது செய்யப்பட்டவர்கள் வாக்கு மூலம் கொடுத்தனர்.
கடையநல்லூரைச் சேர்ந்த சிவா என்ற சிவானந்தம் தமிழக இந்து முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆவார். இவர் கேரளாவில் கல்குவாரியில் வேலை செய்தவர். பாறைகளை உடைக்கப் பயன்படும் அமோனியம் நைட்ரேட்டை வெடிகுண்டு தயாரிப்பதற்காக இவர் கொடுத்திருக்கிறார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
4. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 2008 பிப்ரவரி 24 இல் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் சங் பரிவார்க் கும்பல் வெடிகுண்டு தயார் செய்யும் தொழிற்சாலையையே நடத்திவரும் சங்கதி வெளியில் வந்தது.
பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஸ்ரா மற்றும் பூபீந்தர் சிங் ஆகியோர் வெடிகுண்டுகளைத் தயாரிக்கும்பொழுது எதிர்பாராத விதமாக அவை வெடித்து உடல் சிதறிப்போனார்கள்.
மிகப்பெரிய தொடர் குண்டுவெடிப்பு வன்முறைக்கு அவர்கள் திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது. கான் பூர் காவல்துறை அய்.ஜி. எஸ்.என். சிங் செய்தியாளர் களிடம் இதுபற்றி விளக்கினார்.
வெடிகுண்டு தயாரிப்புக்குத் தேவையான ஏராளமான பொருள்களும் கைப்பற்றப்பட்டன.
இராணுவத்தில் பயன்படுத்தப்படக்கூடிய குண்டுகளுக்கு ஒப்பானவை அவை!
வரைபடங்களும், நாள்குறிப்பு, தாக்கப்பட வேண்டிய முசுலிம்களுக்குச் சொந்தமான முக்கிய இடங்கள் பற்றிய விவரங்கள் எல்லாம் கிடைத்தன.
5. மகாராட்டிரத்தில் நந்தித் எனும் இடத்தில் இதே போல, குண்டுகளைத் தயார் செய்துகொண்டிருந்த போது, வெடித்துச் சிதறியதால் பஜ்ரங்தள் தீவிரவாதிகளான நரேஷ்ராஜ் மற்றும் ஹிமான் ஷீ பான்சே ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர்(4.5.2006).
6. மகாராட்டிர மாநிலம் மலேகானில் சிமி அலுவலகம் சக்தி வாய்ந்த குண்டுகளால் தகர்க்கப்பட்டது (29.9.2008). ஆறு இசுலாமியத் தோழர்கள் பலியானார்கள்; 90 பேர் படுகாயமடைந்தனர்.
மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடி குண்டுகளை எடுத்துவந்து வெடிக்கச் செய்திருப்பது புலன் விசாரணையில் தெரியவந்தது. டைமர் கருவி பொருத்தப்பட்டு இருந்த அந்த வெடிகுண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டு இருந்தது.
புலன் விசாரணையில் பெண் சாமியார் பிரக்யாசிங் பாரதி தாக்கூர் (வயது 38) என்பவர் இதன் பின்னணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டுவிட்டார். வந்தே மாதரம் என்ற அமைப்பைத் தொடங்கிய இந்தப் பெண் சாமியாருக்கு உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று வருணிக்கப்பட்ட முதலமைச்சராகிய நரேந்திரமோடி, குஜராத் மாநில அரசின் உதவித் தொகையெல்லாம் கூட கிடைத்து வருகிறதாம்!
படிக்கும் காலத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர்ப் பிரிவான ஏபிவிபியில் (ABVP)தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். துர்காவாகினி, ஜாக்ரான் மஞ்ச் இவைகளில் தீவிர உறுப்பினராக இருந்திருக்கிறார் இந்தப் பெண் சாமியார்!
பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோரிடம் நெருக்கமானவர் இந்தப் பெண் சாமியார். மேடைகளில் இந்து வெறித்தன நெருப்பைக் கக்கும் பேச்சாளர் இவர். இவரோடு மேலும் மூவர் இந்த வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். மூவரும் இராணுவத் தில் பணியாற்றிய அதிகாரிகள். இருவர் கைது செய்யப்பட்டுவிட்டனர்; இராணுவப் பணியில் இருக்கும் இன்னொருவரைக் கைது செய்ய இராணுவத் துறையிடமிருந்து அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர்.
குல்கர்னி, உபாத்யா ஆகிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஆவார்கள். நாசிக் அருகே இராணுவப் பயிற்சி மையம் ஒன்றினை நடத்திவருகின்றனர். வெடிகுண்டுகளைத் தயார் செய்வது எப்படி? அவற்றைக் கையாளுவது எப்படி என்கிற பயிற்சிகளை யெல்லாம் சங்பரிவார்க் கும்பலுக்கு இவர்கள் கற்றுத் தந்துள்ளனர்.
பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணு வத்திலும் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். வகையறாக் களை நுழைத்தனர். விமானப் படைத் தளபதி விஷ்ணு பகவத் இதனை அப்பொழுதே வெளிப்படுத்திய துண்டு.
பா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், தளபதிகள் கலந்துகொண்டு விளக்கம் அளித்ததையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.
96 ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க்கப்பட்டது ஏன் என்பது இப்பொழுது மகாராட்டிரத்தில் - வெடிகுண்டு வழக்கில் இராணுவ அதிகாரிகள் மூவர் சம்பந்தப்பட்டதிலிருந்து தெரிந்து கொள்ளலாமே!
மகாராட்டிர மாநிலம் மலேகானில் குண்டுவெடித்த அதே நாளில் குஜராத் மாநிலம் மாடேகாவிலும் குண்டுவெடித்தது. இரண்டும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதற்குமுன் நடைபெற்ற அனைத்துக் குண்டுவெடிப்பு களின் பின்னணியில் சங் பரிவார்க் கும்பல் பெரும்பாலும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்று கருதப்படுகிறது.
இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் பயிற்சி நிலையங்களையும், தொழிற்சாலைகளையும் வைத்து திட்டமிட்ட வகையில் இந்தக் கும்பல் செயல்பட்டதைப் பார்க்கும்பொழுது இந்த அபாயகரமானவர்கள் நாடு முழுவதும் வெடிகுண்டு வேலையை அரங்கேற்றுபவர்கள் என்பது எளிதில் விளங்கிவிடும்.
சூரத் நகரில் வெடிகுண்டு சேதத்தைப் பார்வையிட நரேந்திர மோடி வந்தபோது, பாதையில் மரங்களில் வைக்கப்பட்டிருந்த 18 வெடிகுண்டுகளைக் காவல்துறையினர் கண்டுபிடித்து எடுத்தனர். வைத்ததே அவர்களாகவே இருக்கக்கூடும் என்கிற அய்யம் நியாயமானதே!
சங்பரிவார்க் கும்பல் இப்படியெல்லாம் வன்முறைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்ய தொழிற்சாலை களையெல்லாம் வைத்துச் செயல்படும் பயங்கரமான தகவல்கள் அம்பலத்திற்கு வந்து கொண்டேயிருக்கின்றன. வழக்கம்போல் எங்கள்மீது அபாண்ட பழி என்று கூறி கூக்குரல் போடுகிறார்கள் சங் பரிவார் மற்றும் பா.ஜ.க.வினர்.
இந்த யோக்கியதையில் உள்ள ஒரு கூட்டம் சிறுபான்மையினர்மீது வன்முறை முத்திரை குத்தி அவர்களுக்கு எதிரான வெறுப்பினைத் தூண்டும் ஒரு வேலையில் திட்டமிட்ட முறையில் இறங்கியுள்ளது என்பதுதான் உண்மை. இதுபோலவே ஒரிசாவிலும் கிறித்தவர்கள்மீது பழி - படுகொலைகள்.
மத்திய - மாநில அரசுகள் இந்த அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியிலில் வைத்து சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகளை உடனடியாகச் செய்யாவிட்டால், நாடு பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்.

கி.வீரமணி
ஆசிரியர்

கருத்துகள் இல்லை: